நாட்டின் வரலாற்றில் அழியாத சுவடுகளை விட்டுச்சென்றவர் கருணாநிதி.. பிரதமர் மோடி புகழாரம்
கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கிய நிலையில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது.
சென்னை கலைவானர் அரங்கில் இன்று மாலை 6.50 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறார். இந்த விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் புகழ்மிக்க தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக நடைபெறும் இந்நிகழ்ச்சி மிகவும் முக்கியமானது.
இந்திய அரசியல், இலக்கியம், சமுதாயத்தில் உயர்ந்த தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் எப்போதும் ஆர்வம் கொண்டவராக கருணாநிதி திகழ்ந்தார்.
அரசியல் தலைவராக முதல்வராக கருணாநிதி நாட்டின் வரலாற்றில் அழியாத சுவடுகளை விட்டுச்சென்றுள்ளார். மக்களால் முதல்வராக பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கருணாநிதி மக்கள், கொள்கை, அரசியலை மிகவும் நன்றாக புரிந்து வைத்திருந்தார்.
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட உள்ள நிலையில் அவரின் நினைவுகளையும், அவரின் கொள்கைகளையும் நினைவுகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. இந்நாளில் கருணாநிதிக்கு எனது இயதப்பூர்வமான மரியாதையை செலுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.