முகூர்த்த நேரத்திற்கு சற்று முன்.. மாப்பிள்ளையை 15 முறை கத்தியால் குத்தி கொன்ற தந்தை.. டெல்லியில் அதிர்ச்சி!
திருமணம் நடைபெற இருந்த நேரத்தில், மகனை 15 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியின் டெவ்லி எக்ஸ்டென்சன் பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் சிங்கால் (29). இவர், ஜிம் பயிற்சியாராக இருந்து வந்தார். இவர் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவரது விருப்பத்திற்கு மாறாக, திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் பெண் பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில், கவுரவ் சிங்கால், தனது தந்தையான ரங்லால் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த ரங்லால், மகன் என்றும் பாராமல், கத்தியால் கவுரவ் சிங்காலின் முகம் மற்றும் மார்பில் சுமார் 15 முறை கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் நிலைகுலைந்து போன கவுரவ் சிங்கால், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி அங்கித் சவுகான் கூறுகையில், கவுரவின் தந்தை ரங்லால், 50 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் 15 லட்சம் ரொக்கத்துடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். ரங்லால், கவுரவுடன் வாக்குவாதம் செய்ததாகவும், அப்போது கவுரவ் தனது தந்தையை அறைந்ததாகவும் சந்தேகிக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த ரங்கலால், தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து, கவுரவை கொன்றுவிட்டு, பணம் மற்றும் நகைகளுடன் வீட்டை விட்டு தப்பிச் சென்றார்.