பீகாரில் ஜீவித்புத்ரிகா பண்டிகை.. நீராடிய போது 37 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி!

 
Bihar

பீகாரில் புனித நீராடும் பண்டிகையில் 37 குழந்தைகள் உட்பட 43 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் ஜீவித்புத்ரிகா என்ற பெயரில் பண்டிகை ஒன்று நேற்று கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின்போது, தங்களுடைய குழந்தைகளின் நலன்களுக்காக பெண்கள் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். அதன் பின்னர் குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள். இந்த பண்டிகையின்போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள்.

dead-body

இந்த நிலையில், இந்த பண்டிகை கொண்டாட்டத்தில் பீகாரில் உள்ள கிழக்கு சம்பாரன், மேற்கு சம்பாரன், நாளந்தா, அவுரங்காபாத், கைமூர், பக்சார், சிவான், ரோத்தாஸ், சரண், பாட்னா, வைஷாலி, முசாபர்பூர், சமஸ்திபூர், கோபால்கஞ்ச் மற்றும் அர்வால் என 15 மாவட்டங்களில் நீரில் மூழ்கி 43 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 37 பேர் குழந்தைகள் ஆவர்.

இவர்கள் தவிர 3 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது. இதுவரை 43 உடல்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன என பேரிடர் மேலாண் துறை வெளியிட்ட  அறிக்கை தெரிவிக்கின்றது.


இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. இதில், 8 பேரின் குடும்பத்தினர் இழப்பீட்டு தொகையை பெற்று விட்டனர் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.

From around the web