வாட்டி வதைக்கும் கடுங் குளிர்.. பஞ்சாபில் வரும் 21-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
கடம் குளிர் காரணமாக பஞ்சாபில் வரும் 21-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக குளிர் வாட்டி வதைக்கிறது. வெப்பநிலை இயல்பைவிட குறைந்துள்ள நிலையில், சாலை முழுவதும் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. நடுங்க வைக்கும் குளிரில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள் சாலைகளில் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
மேலும் பனிமூட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடப்பட்ட குளிர்கால விடுமுறை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. அங்கு 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 14-ம் தேதி (இன்று) வரை விடுமுறை விடப்பட்டிருந்தது. 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், வரும் 21-ம் தேதி வரை பஞ்சாபில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுவதாகவும், 6 முதல் 10-வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டும் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்படுவதாகவும் பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.