இனி ‘இந்தியா’ இல்லை? பாரத்? நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறதா?

 
Parliament

‘இந்தியா’ என்ற பெயரை பாரத் என மாற்றும் முயற்சியில் ஒன்றிய அரசு பாஜக இறங்கிவிட்டதாக எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணி இந்தியா என்று பெயர் வைத்தது முதலே மத்தியில் ஆளும் பாஜக அரசு கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் இந்தியா என உச்சரிப்பதற்கு பதிலாக பாரதம் என்ற சொல்லையே ஒன்றிய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஒன்றிய அரசு திடீரென நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டியிருப்பதாக அறிவித்தது. செப்டம்பர் 18 முதல் 22-ம் தேதி வரை இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கான செயல் திட்டம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஒன்றிய அரசு கூட்டும் இந்தக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் மசோதா கொண்டுவரப்பட இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் ஒன்றிய அரசு அமைத்துள்ளது.

Bharat

இதனிடையே அண்மைக்காலமாக ஒன்றிய அமைச்சர்கள் ‘பாரதம்’ என்ற சொல்லையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ‘இந்தியா’ என்பதை தவிர்த்தும் வருகின்றனர். தற்போது ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கான அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் என இடம்பெற்றுள்ளது. பாஜக எம்பி ஹர்நாத் சிங் என்பவரும் நாட்டின் பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்ய கோரி வருகிறார்.

இதற்கு முன்னர் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தும் பாரத தேசம் என்றே அழைக்க வலியுறுத்தினார். தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியும் பாரதம் என்ற சொல்லை பயன்படுத்தி வருகிறார்.

Parliament

இதனால் ஒன்றிய அரசு கூட்டியுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் நாட்டின் பெயரான ‘இந்தியா’ என்பதையே ‘பாரத்’ அல்லது ‘பாரதம்’ என மாற்ற ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதோ? என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் இந்த சர்வாதிகாரப் போக்குக்கு திமுக, காங்கிரஸ் , இடதுசாரிகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.

From around the web