வக்பு சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானதா? தலைமை நீதிபதி கேள்வி!!

 
BR Gavai

வக்பு சட்டத் திருத்தம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் மூன்று அம்சங்களை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்துகளை நீக்கும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பது ஒரு பிரச்சினை. மத்திய மற்றும் மாநில வக்பு கவுன்சிலின் அமைப்பில் முஸ்லிம்கள் மட்டுமே அதிகாரபூர்வ உறுப்பினர்களாக செயல்பட வேண்டும் என்பது இரண்டாவது பிரச்சினை. சொத்து அரசாங்க நிலமா வக்பு நிலமா என்பதை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளிப்பது மூன்றாவது பிரச்சினை ஆகும் என்றும் இந்த மூன்று பிரச்சனைகளை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் தவான் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். “வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத 7 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் வக்பு கவுன்சிலை அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட வக்பு சொத்துகள் தொடர்பான விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வக்பு சொத்துகளை பறிக்கும் நோக்கில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஏராளமான வக்பு சொத்துகளை பறிக்கும் நோக்கில்தான் புதிய சட்டம் வரையறுக்கப்பட்டிருக்கிறது” என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டனர்.

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “இந்தச் சட்டம் அரசியலமைப்பு சாசனத்துக்கு விரோதமானது என்பதை மனுதாரர்கள் நிரூபிக்க வேண்டும். சட்டத்தில் உள்ள விதிமீறல்கள், தவறுகள் தொடர்பாக போதிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். அதன் பிறகுதான் உரிய முடிவு எடுக்க முடியும். நாளையும் (புதன்கிழமை) விசாரணை தொடர்ந்து நடைபெறும்” என்று தெரிவித்தார்

From around the web