மீண்டும் புழக்கத்தில் வருகிறதா 1,000 ரூபாய் நோட்டு? விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி!

1,000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் கொண்டுவர வாய்ப்பில்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை அறிவித்தது. அதன்படி, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அன்று நள்ளிரவு முதல் நாட்டின் பணப் புழக்கத்தில் இருந்த ரூ.1,000 மற்றும் 500 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பணம் திடீரென செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்களும் வியாபாரிகளும் திண்டாடி போகினர்.
அதேசமயம், ரிசர்வ் வங்கி புதிய ரூ 500 மற்றும் 2,000 நோட்டுகளை வெளியிட்டது. பணப் புழக்கத்தால் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில் இந்த புதிய ரூ.2,000 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதையடுத்து, 2018-19 நிதியாண்டில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை அச்சிடுவதை இந்திய ரிசர்வ் வங்கி முற்றிலுமாக நிறுத்தியது.
இந்த நிலையில், பணமதிப்பிழப்பு பிரச்சனைகள் குறைந்துள்ளதாலும், நாட்டின் பண பரிமாற்றத்திற்கு இதர ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் இருப்பதாலும் ரூ. 2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கு பிறகு ரூ.2,000 நோட்டுகள் செல்லாது அந்த நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது.
ஆர்பிஐ-ன் இந்த அதிரடி அறிவிப்பு காரணமாக, 2023 மே 19 அன்று 3.56 லட்சம் கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், 2023 செப்டம்பர் 29 அன்று வரை 3.43 லட்சம் கோடி 2,000 ரூபாய் நோட்டுகள், அதாவது 87 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் இதுவரை திரும்ப வந்துவிட்டதாகவும், இன்னும் 12 ஆயிரம் கோடி மதிப்புடைய நோட்டுகள் திரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தது.
இதற்கிடைய, 2,000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை திரும்பப்பெறும் அவகாசம் கடந்த 7-ம் தேதியுடன் முடிந்தது. அக்டோபர் 8-ம் தேதி முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 மையங்களில் மட்டுமே உரிய ஆவணங்களுடன் டெபாசிட் செய்ய இயலும் என்பது இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.2,000 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுள்ள நிலையில், அடுத்த கட்டமாக ரூ. 1,000 நோட்டுக்களை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகளவிலும் போதுமான அளவிலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை காரணமாக ரொக்கப்பணத்துக்கான தேவை குறைந்து வருவதாகவும், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மீண்டும் கொண்டு வரப்படுவதாக வெளியான தகவலை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.