கர்நாடக புதிய முதல்வராக சித்தராமையா? துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு

 
siddaramaiah

கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையாவை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. இதையடுத்து கடந்த 13-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.

இந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்த மறுநாளே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. மேலிட பார்வையாளர்கள் சுஷில்குமார் ஷிண்டே, ஜிதேந்திர சிங், தீபக் பபாரியா ஆகியோரின் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் மேலிடத்திற்கு வழங்கி ஒரே வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதைத்தொடர்ந்து மேலிட பார்வையாளர்கள், ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் தனித்தனியாக கருத்துகளை கேட்டு அறிந்தனர். யாரை முதல்வர் ஆக்கலாம் என்று அவர்கள் கருத்துகளை தெரிவித்தனர். அந்த கருத்துகளை ஒருங்கிணைத்து அறிக்கை தயாரித்த மேலிட பார்வையாளர்கள், கடந்த 15-ம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றனர்.

Karnataka

அந்த அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் தாக்கல் செய்தனர். பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு சித்தராமையாவுக்கு கிடைத்தது. இதையடுத்து மேலிடத்தின் அழைப்பின் பேரில் சித்தராமையா அன்றைய தினம் மதியம் டெல்லி புறப்பட்டு சென்றார். உடல்நலக்குறைவு காரணமாக ஒரு நாள் தாமதமாக டி.கே.சிவக்குமார் டெல்லிக்கு சென்றார்.

நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் தனித்தனியாக நேரில் சந்தித்து பேசினர். டி.கே.சிவக்குமார், தான் கஷ்டப்பட்டு கட்சியை பலப்படுத்தி வெற்றி பெற வைத்ததாகவும், அதனால் தனக்கு முதல்-மந்திரி பதவியை வழங்கியே தீர வேண்டும் என்றும் பிடிவாதமாக கூறினார். ஒருவேளை முதல்-மந்திரி பதவி வழங்காவிட்டால் ஆட்சியில் தான் பங்கேற்க போவது இல்லை என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல் வெளியானது.

சித்தராமையா, தான் 5 ஆண்டுகள் முதல்வராக இருந்தபோது எந்த தவறும் செய்தது இல்லை என்றும், களங்கம் இல்லாமல் ஆட்சி நிா்வாகத்தை நடத்தியதாகவும், கட்சியின் வெற்றிக்கு தனது பங்களிப்பு அதிகமாக இருப்பதாகவும், தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை சந்தித்து இருவர் கூறிய கருத்துக்கள் பற்றி ஆலோசனை நடத்தினார்.

ந்த நிலையில் நேற்று ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் காலை 11 மணிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் தனித்தனியாக சந்தித்து பேசினர். அப்போது, சித்தராமையாவிடம் பேசிய அவர், தங்களுக்கு முதல்வர் பதவி வழங்க இருப்பதாகவும், அனைவரையும் அரவணைத்து சிறப்பான முறையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

அதைத்தொடர்ந்து சந்தித்த டி.கே.சிவக்குமாரிடம் ராகுல் காந்தி, அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும், தங்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதாகவும், வரும் காலத்தில் உங்களுக்கு உரிய பதவி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

siddaramaiah

இதை ஏற்க மறுத்த டி.கே. சிவக்குமார், தனக்கு முதல்வர் வழங்கியே தீர வேண்டும் என்று பிடிவாதமாக கூறினார். மேலும் அவர், ஒருவேளை தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்காவிட்டால், சித்தராமையாவுக்கும் அந்த பதவி வழங்க கூடாது என்றும், அதற்கு பதிலாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்றும் கூறியதாக தகவல் வெளியானது. 

இதை ராகுல் காந்தி ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. டி.கே.சிவக்குமாரின் பிடிவாதமான போக்கால் புதிய முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி கொண்டிருந்தது. அதற்கு ராகுல் காந்தி கட்சியின் நலன் கருதி இந்த முடிவை தாங்கள் ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து இதற்கு சம்மதம் தொிவித்துவிட்டு அதிருப்தியுடன் டி.கே.சிவக்குமார் அங்கிருந்து வெளியே வந்தார். அங்கிருந்து நேராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார். அங்கு தனக்கு முதல்வர் பதவி வழங்காதது குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

முதல்வர் பதவி விவகாரத்தில் இழுபறி நிலை முடிவுக்கு வராததால் கர்நாடக அரசியலில் பரபரப்பு நீடித்து வந்த நிலையில், கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 20-ம் தேதி பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒருமித்த கருத்துக்கு வந்தார்.

From around the web