காதலுக்கு இடையூறு.. 11 மாத குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கேரளாவில் அதிர்ச்சி!

 
Kerala

கேரளாவில் காதலுக்கு இடையூறாக இருந்ததால் 11 மாத கைக்குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள மாவேலிக்கரா பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மல். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஷில்பா என்பவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இவர்களுக்கு 11 மாதத்தில் ஷிகன்யா என்ற பெண் குழந்தை இருந்தது. இருவருக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வந்ததால், இருவரும் சில மாதங்களாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அஜ்மலை தொடர்பு கொண்ட ஷில்பா, குழந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதனை நம்ப மறுத்த அஜ்மல், குழந்தையுடன் தன்னை வந்து சந்திக்குமாறு ஷில்பாவிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷில்பா கார் ஒன்றில் அஜ்மல் நடத்தி வரும் தேநீர் கடைக்கு வந்துள்ளார். அப்போது காரில் இருந்து மர்ம நபர் ஒருவர் இறங்கி ஓடியதாக கூறப்படுகிறது.

baby

இதனால் சந்தேகம் அடைந்த அஜ்மல், காரின் பின்பக்கம் கிடத்தப்பட்டிருந்த குழந்தையை பார்த்தபோது, குழந்தை அசைவின்றி கிடந்துள்ளது. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த அஜ்மல் இது தொடர்பாக ஷொரனூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் குழந்தையுடன் தம்பதிகளை அரசு மருத்துவமனைக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றபோது குழந்தை இறந்து நீண்ட நேரமாகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் குழந்தையின் உடலில் சந்தேகத்திற்கிடமான காயங்கள் எதுவும் இல்லாததால், ஷில்பாவை போலீசார் வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்தை நெரித்து குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஷில்பாவை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது பணிக்கு இடையூறாக இருந்து வந்ததால், குழந்தையை கொலை செய்ததாக ஷில்பா ஒப்புக்கொண்டு உள்ளார்.

Police

இதனிடையே இந்த சம்பவத்தில் காரில் இருந்து தப்பி ஓடிய நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜ்மல் உடனான கருத்து வேறுபாடு காரணமாக வேறு ஒருவருடன் காதலில் இருந்து வந்த ஷில்பா, அதற்கு இடையூராக இருந்ததால் குழந்தையை கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே ஷில்பாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் அவர் அஜ்மலுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில், அஜ்மலுக்கு குழந்தை இறந்துவிட்டது குறித்து தகவல்களை அனுப்பி இருந்தது தெரியவந்ததால் அது தொடர்பாகவும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web