துணைக் குடியரசுத் தேர்தலில் இந்தியா அணியின் பலே திட்டம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்மதித்தது இதற்காகத் தானா?

 
sudharsan reddy sudharsan reddy

தமிழ்நாட்டைச் சார்ந்த மஹாராஷ்ட்ரா அளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக பாஜக அறிவித்தது.

இவரை எதிர்த்து இந்தியா அணி சார்பில் தமிழ்நாட்டிலிருந்து வைகோ அல்லது திருச்சி சிவா வை திமுக சார்பில் போட்டியிட கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் நேற்று நடைபெற்ற இந்தியா அணி கூட்டத்தில், ஆந்திர பிரதேசத்தைச் சார்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக அறிவித்தது.

இது குறித்து உடனடியாகச் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற திமுக தலைவருமான கனிமொழி, இது தத்துவ அடிப்படையிலான போட்டி என்று அறிவித்தார்.

தேர்வுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி,  நாட்டின் 60 சதவீத மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடுவது மிக்க மகிழ்ச்சியாகும் என்று கூறியுள்ளார். ஆந்திர பிரதேச மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் பிறந்து ஆந்திர உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று ஓய்வு பெற்றாவர் சுதர்சன் ரெட்டி.

தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை அறிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க நினைத்த பாஜகவுக்கு, பாஜக கூட்டணிக்குள்ளேயே சலசலப்பையும் நெருக்கடியையும் கொடுக்கும் வகையில் வேட்பாளர் தேர்வை செய்துள்ளது இந்தியா அணி.

துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில், மொத்தம் 782 நாடாளுமன்ற ( மாநிலங்களவை, மக்களவை) உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர் வெற்றி பெறுவதற்கு 392 வாக்குகள் தேவை. பாஜக அணியில் 293 மக்களவை உறுப்பினர்களும் 133 மாநிலங்களவை உறுப்பினர்களும் என மொத்தம் 426 வாக்குகள் உள்ளன. அதாவது வெற்றி பெறுவதற்கு தேவையானதை விட கூடுதலாக 34 வாக்குகள் உள்ளன.

இந்த 34 வாக்குகளில் ஆந்திர பிரதேசத்தில் தெலுகு தேசம் கட்சியின் 16 மக்களவை உறுப்பினர்களும் 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் அடங்குவர். மேலும் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிக்கு 2 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 20 வாக்குகளையும் சுதர்சன் ரெட்டிக்கு பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. 

தமிழர் என்ற அடிப்படையில் திமுகவுக்கு செக் வைத்த பாஜகவுக்கு, தெலுங்கர் என்ற அடிப்படையில் பாஜக அணியின் 20 வாக்குகளுக்கு குறி வைத்துள்ளது இந்தியா அணி. ஏற்கனவே ராகுல் காந்தியிடம் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், சந்திரபாபு நாயுடுவின் ஆதரவு சுதர்சன் ரெட்டிக்கு எளிதில் கிடைத்து விடும் என்று கருதப்படுகிறது.

பாஜக அணியில் இல்லாத பிற கட்சிகளான ஆம் ஆத்மி, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், பிஜு  ஜனதா தளம், அகாளி தளம் போன்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் வாக்குகளையும் திரட்ட இந்தியா அணி மும்முரமாக செயல்படத் தொடங்கியுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவும் சந்திரபாபு நாயுடு பவன் கல்யாணின் ஆதரவும் சுதர்சன் ரெட்டிக்கு கிடைக்கும் பட்சத்தில் வெற்றிக்கு  கூடுதலாக 15 வாக்குகள் மட்டுமே தேவை.

பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 12 மக்களவை உறுப்பினர்களும், 4 மாநிலங்களவை உறுப்பினர்களும் உள்ளனர். சோஷியலிஸ்ட் என்ற அடிப்படையிலும், மாநிலத்தில் தேர்தல் வர உள்ள நிலையில் பாஜகவுக்கு நெருக்கடி தருவதற்காகவும் நிதிஷ்குமார் இந்தியா அணியின் பக்கம் திரும்பினால் ஆச்சரியமில்லை.

ராகுல் காந்தி நிதிஷ்குமாருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பீகாரில் ராகுல் காந்தியின் பேரணிக்கு கிடைத்துள்ள வரவேற்பால், அணி மாற தயாராகி விட்டார் நிதிஷ்குமார் என்ற தகவலும் அடிபடுகிறது. தேர்தல் ஆணைய முறைகேடுகளை சுட்டிக்காட்டி, பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு ராகுல்காந்தி அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் தயாராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அதன் முதல்கட்டமாக துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரை தங்கள் பக்கம் இழுத்து பாஜகவுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட்  கொடுக்க இந்தியா அணி தயாராகி வருவதாகத் தெரிகிறது. இந்த கணக்குகளையெல்லாம் ஏற்றுக் கொண்டு தான் தமிழ்நாட்டிலிருந்து வேட்பாளரை நிறுத்தும் முயற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைவிட்டார் என்று கருதப்படுகிறது.
 

From around the web