இந்தியாவுக்கு முக்கிய நாள்.. இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான்-3..!

 
ISRO

சந்திரயான்-3 விண்கலம் இன்று மதியம் விண்ணில் பாய்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்குத் தேவையான காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை தகவல்கள், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன், வழிகாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இவற்றுடன் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது.

அந்த வகையில், பூமியில் இருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி நிலவுக்கு ‘சந்திரயான்-1’ என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இது உலக நாடுகளை ஆச்சரியத்தில் தள்ளியது. நிலவில் செய்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ISRO

தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டது. கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. எனினும், தென் துருவத்தில் விக்ரம் லேண்டரின் மெதுவான தரையிறக்கம் சவாலாக மாறியது. சந்திரயான்-2 கடைசி கட்டத்தில் நிலவில் இறங்கும் போது அதன் கட்டுப்பாட்டை இழந்து நிலவுடன் மோதியது. இதனால் சந்திரயான்-2 பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தோல்வியில் துவண்டுவிடாமல் தொடர்ந்து ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறைவு செய்து உள்ளனர்.

சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள 'இன்டர்பிளானட்டரி' என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ராக்கெட்டில் உள்ள 'புரபுல்சன்' பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டு உள்ளது. பின்னர் லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதியாகும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது.

ISRO

இந்த நிலையில் ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான 25½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. முழுமையாக கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, இன்று (ஜூலை 14) பகல் 2.35 மணி 17 வினாடியில் ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான 'சந்திரயான்-3', விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். இந்தியாவின் லட்சிய நிலவுப் பயணம் இன்னும் சில மணிநேரங்களில் தொடங்க உள்ளது. இந்தியாவின் சந்திரயான்-2 முயற்சி தோல்வியடைந்ததால், சந்திரயான்-3 முயற்சி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

From around the web