சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி 20 சதவீதம் உயர்வு.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
oil

சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ஒன்றிய அரசு இறக்குமதி வரியை நிர்ணயம் செய்துள்ளது. இந்த இறக்குமதி வரி என்பது ஒவ்வொரு பொருட்களுக்கும் மாறுபடும். குறிப்பாக சமையல் எண்ணெய்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உலகில் அதிகளவில் சமையல் எண்ணெய் இறக்குமதி நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை தாவரங்கள் மூலம் கிடைக்கும் எண்ணெய் வித்துகளின் வழியாக உற்பத்தியாகும் சமையல் எண்ணெயின் தேவையில் 70 சதவீதத்தை இறக்குமதி மூலமாக தான் பூர்த்தி செய்து வருகிறது. குறிப்பாக இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்தில் இருந்து அதிகளவில் பாமாயில் நமக்கு இறக்குமதியாகிறது. அதேபோல் அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா, உக்ரைனில் இருந்து சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.

oil

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது. இதுதொடர்பாக நிர்மலா சீதாராமனின் ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “Crude வகை சோயாபீன், சூரியகாந்தி மற்றும் பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் மீதான அடிப்படை சுங்க வரி பூஜ்ஜியத்தில் இருந்து 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த 3 வகையான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களின் இறக்குமதி வரி என்பது 12.5 சதவீத்தில் இருந்து 32.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு என்பது நேற்று வெளியானது. இந்த வரி உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. நம் நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் இந்த முடிவு என்பது எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் சோயாபீன் விவசாயிகள் அதிகம் உள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மகாராஷ்டிரா விவசாயிகளை மனதில் வைத்து இந்த இறக்குமதி வரி என்பது அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது நம் நாட்டில் சமையல் எண்ணெய்க்கான எண்ணெய் வித்துகள் குறைந்த அளவில் கிடைக்கின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அதேவேளையில் பொதுமக்கள் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெயை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கும் பட்சத்தில் வெளிநாடுகளில் இருந்து நமக்கு வரும் பாமாயில், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெயின் அளவு குறையும்.

Oil

இதனால் உள்நாட்டில் உள்ள சமையல் எண்ணெய் வித்துகளுக்கு மவுசு கூடி அவர்களுக்கு லாபம் கிடைக்கும். இதனால் தான் தற்போது சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி என்பது 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி வரி உயர்வு என்பது விவசாயிகளுக்கு லாபமானதாக மாறினாலும் கூட சமையல் எண்ணெய் விலையை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

அதாவது வெளிநாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி குறையும்படி தானாகவே அதன் விலை என்பது உச்சம் தொடலாம். அதன்படி ரூ.25 வரை சமையல் எண்ணெய் விலை என்பது அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் இன்னும் ஒரு வாரத்தில் இந்த 3 வகையான எண்ணெயின் விலை என்பது அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுபற்றி டெல்லியை சேர்ந்த உலகளாவிய எண்ணெய் வர்த்தக டீலர் ஒருவர் கூறுகையில், ‛‛இந்தியாவில் சமயைல் எண்ணெய் இறக்குமதியில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக பாமாயில் தான் இருக்கிறது. இதனால் தற்போதைய இறக்குமதி வரி உயர்வு என்பது இன்னும் ஒரு வாரத்தில் பாமாயில் விலையை கிடுகிடுவென உயரலாம்” என்றார்.

From around the web