ஒரு வீடியோ பார்த்தால் 50 ரூபாய்.. உண்மை என நம்பி 15 லட்சத்தை இழந்த வாலிபர்.. டெல்லி சைபர் கிரைம் விசாரணை!
வீடியோ பார்த்தால் 50 ரூபாய் தருவதாக கூறி டெல்லி வாலிபரிடம் இருந்து ரூ. 15 லட்சத்தை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக இணையதளம் மூலம் மக்களை வசியம் செய்து நடைபெறும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. யூடியூப் வீடியோக்களை பார்த்தால் பணம், லைக் செய்தால் பணம், வீடியோவில் வரும் விளம்பரங்களை பார்த்தால் பணம் என ஆன்லைனில் பகுதி நேர வேலையாக அளிப்பதாக கூறி ஏமாற்றி வருகின்றனர். சிலர் இதனை உண்மை என நம்பி தாங்கள் சேமித்து வைத்த பணத்தை இழக்கிறார்கள்.
அந்த வகையில் டெல்லி கரவால் நகரில் வசிக்கும் 31 வயது நபர், ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் வாய்ப்பை வழங்குவதாக கூறிய மோசடி கும்பலிடம் ரூ.15 லட்சத்தை இழந்துள்ளார். இதுகுறித்து வடகிழக்கு சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட நபர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது, எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் வேலை பார்க்கலாம் என்றும், வீடியோக்களை பார்த்து மதிப்பாய்வு செய்தால் ஒரு வீடியோவுக்கு 50 ரூபாய் தருவதாகவும் கூறினார்.
அதை ஏற்றுக்கொண்ட நான் அவர்கள் குறிப்பிட்ட 3 வீடியோக்களை பார்த்து மதிப்பாய்வு செய்தேன். அதற்கான பணம் ரூ.150ஐ எனது வங்கி கணக்கிற்கு உடனே அனுப்பினர். பணம் கிடைத்ததால் அந்த கம்பெனி போலியானது அல்ல என நினைத்தேன்.
அதன்பின்னர், தகவல் தொடர்பான செயலிக்கு எனது பணியை மாற்றினார்கள். அதில் வேறு பணி, வேறு டாஸ்க் என்ற பெயரில், அதிக அளவில் பணம் முதலீடு செய்தால் அதிகமாக சம்பாதிக்க முடியும் என கூறினார்கள். நானும் நம்பி பணத்தை செலுத்தினேன். ஆனால், வருமானம் வரவில்லை. அந்த மோசடியாளர்கள் என்னிடம் இருந்து அக்டேபர் 20-ம் தேதிக்குள் 15.20 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.