அது நடந்தால் ஓராண்டுக்கு மு.க.ஸ்டாலின் பிரதமராக இருப்பார்.. ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு கருத்து
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு மு.க.ஸ்டாலின் பிரதமராக இருப்பார் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த ஏப்ரல் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தல்கள் நடைபெற்றன. இந்நிலையில், வரும் மே 7-ம் தேதி மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு உள்ளன.
இந்த நிலையில், பிரதமர் மோடி கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனம் செய்து வருகிறார். அதாவது, இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு ஒரு பிரதமர் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருவதாகவும், அதன்படி ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒருவர் பிரதமராக இருப்பார்கள். இவ்வாறு ஓராண்டுக்கு ஒரு பிரதமர் இருந்தால் உலகம் நம்மை பார்த்து ஏளனம் செய்யும். உங்களுக்கு ஓராண்டுக்கு ஒரு பிரதமர் தேவைதானா? என்று தொடர்ச்சியாக பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி விமர்சனம் செய்து பேசி வருகிறார்.
அதற்கு எதிர்வினையாற்றிய எதிர்க்கட்சிகள் சிலர், நாங்கள் ஓராண்டுக்கு ஒரு பிரதமர் கூட ஏற்றுக்கொள்வோம், ஆனால் நிச்சயமாக மோடியை பிரதமராக வர விடமாட்டோம் என்று கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில், 30 ஆண்டுகளாக ஸ்திரத்தன்மையற்ற ஆட்சி நடைபெற்றதால் நாடு அதற்கான விலையை கொடுத்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக வலிமையான தலைவர் கிடைத்ததன் மூலம் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு மு.க.ஸ்டாலின் பிரதமராக இருப்பார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஓராண்டு பிரதமராக இருப்பார். ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சம் இருந்தால் ராகுல் காந்தி பிரதமராக இருப்பார். இந்தியா கூட்டணி கூறுவது போல் ஒரு நாட்டை இவ்வாறெல்லாம் நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.