கொச்சியில் உயிரை பறித்த ஹெலிகாப்டர்.. பயிற்சியின் போது நடந்த கோரம்!

 
LAM

கேரளாவில் கடற்படை ஹெலிகாப்டர் பயிற்சியின்போது விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சி பகுதியில் கடற்படை தலைமையகம் அமைந்துள்ளது. இங்குள்ள ஐ.என்.எஸ். கருடா ஓடுபாதையில் கடற்படை ஹெலிகாப்டர் இன்று பிற்பகல் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது. 

INS

இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ராணுவ வீரர்களில் ஒருவர் பலியானார். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் கடற்படை தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த நபர் யோகேந்திர சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடற்படையை சேர்ந்த சேதக் ஹெலிகாப்டரின் ரோட்டர் பிளேடு ஓடுபாதையில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கடற்படை அதிகாரிகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஏழு பேர் அமரக்கூடிய ஹெலிகாப்டரில் சம்பவத்தின்போது இரண்டு பேர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கடற்படை அறிக்கையின்படி, பராமரிப்பு டாக்ஸி சோதனையின் போது விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணத்தை விசாரிக்க விசாரணைக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

From around the web