இமாசல பிரதேசத்தில் தொடரும் கனமழை.. நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்வு

 
Himachal Pradesh

இமாசல பிரதேசத்தில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

மேகவெடிப்பு காரணமாக இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதுவரை 170 மேகவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், கடந்த 3 நாட்களில் மட்டும் இயல்பைவிட 157 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

திங்கட்கிழமை அன்று பெய்த கனமழையால் தலைநகர் சிம்லாவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சம்மர்ஹில் பகுதியில் உள்ள ஒரு சிவன் கோவில் இடிந்து விழுந்தது. அதே போல் பாக்லி பகுதியில் பல வீடுகள் மண்ணோடு புதைந்தன. மாநிலம் முழுவதும் 3 நாட்களில் 60-க்கும் மேற்பட்டவர்கள் மழை பாதிப்புக்கு பலியானார்கள்.

Himachal Pradesh

இந்த நிலையில் நேற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை தொடர்ந்து வருகிறது. மழைக்கு இடையில் மீட்பு பணிகளும் நடந்து வருகின்றன. இதற்கிடையே நேற்று பகல் வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

சம்மர்ஹில் கோவில் இடிபாட்டில் சிக்கிய மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இதுவரை சம்மர்ஹில் பகுதியில் இறந்த 14 பேரின் உடல்களும், பாக்லி பகுதியில் 5 பேரின் உடல்களும், கிருஷ்ணாநகர் பகுதியில் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு உள்ளன. இதனால் சிம்லா மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 21 ஆக உயர்ந்துள்ளது. இந்த இடங்களில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Sukhvinder Sukhu

மாநில முதல்வர் சுக்விந்தர்சிங் சுக்கு, செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “மாநிலத்தில் கனமழையால் சேதமடைந்துள்ள கட்டமைப்புகளை சீரமைப்பு செய்ய ஓராண்டு காலம் பிடிக்கும். பருவமழை மற்றும் வெள்ளத்தால் சாலைகள், தண்ணீர் தட குழாய்கள் சேதம் அடைந்துள்ளன. சேதமதிப்புகள் ஆராயப்பட்டு வருகின்றன. அவை ரூ.10 ஆயிரம் கோடி வரை இருக்கும். பாதிப்புகளை சரிசெய்யும் பணி மலை போன்ற பெரும் சவாலாக உள்ளது. இருந்தபோதிலும் மாநில அரசு வெகுவிரைவில் சீரமைக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளது” என்று கூறினார்.

மாநில முதன்மை செயலாளர் (வருவாய்) ஆங்கர் சந்த் சர்மா கூறும்போது, “இந்த பருவமழையால் புதன்கிழமை வரை ஏற்பட்ட சேதம் ரூ.7,500 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது” என்றார். “கனமழையால் சிம்லாவின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. 650 சாலைகள் மூடப்பட்டு உள்ளதாகவும், 1,135 மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்) மற்றும் 285 தண்ணீர் வினியோக தடங்கள் பாதிப்பு அடைந்து உள்ளன” என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

From around the web