புரட்டி போட்ட கனமழை.. வெள்ளத்தில் மிதக்கும் குஜராத்! வைரல் வீடியோ

 
Gujarat

குஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், அரியாணா, பஞ்சாப், அசாம், டெல்லி ஆகிய வட மாநிலங்களில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக ராஜ்கோட், சூரத், கிர் சோம்நாத் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த 3 மாவட்டங்களிலும் சராசரியாக 300 மில்லி மீட்டர் மழை நேற்று பதிவாகி இருக்கிறது. குறிப்பாக, கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சூத்ரபாத நகரில் நேற்று காலை 6 மணி முதல் 14 மணி நேரத்தில் 345 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும், ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள தொராஜி தாலுகாவில் 14 மணி நேரத்தில் 145 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், நேற்று ஒரே நாளில் சூரத்தில் 104 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Gujarat

குஜராத்தில் மொத்தமுள்ள 206 நீர்த்தேக்கங்களில் 43 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன. 18 நீர்த்தேக்கங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 19 நீர்த்தேக்கங்களுக்கு மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவை உஷார்படுத்தப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சேர்ந்த 70 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ராஜ்கோட் மாவட்டத்தின் தோராஜி நகரில் மழைநீர் வெளியேறாமல் சாலையில் தேங்கி நிற்பதால் கார் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் வெள்ள நீரில் மிதக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.


ஏராளமான வீடுகளுக்குள்ளும் கடை உள்ளிட்ட வர்த்தக நிறுவன கட்டிடங்களுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளதால் சூத்ரபாத நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ராஜ்கோட் மற்றும் சூரத் மாவட்டங்களின் பல பகுதிகளிலும் மழை நீர் காரணமாக மக்கள் மிகுந்த சிரமங்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

From around the web