கடும் பனிமூட்டம்.. ஆட்டோ - டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 12 பேர் பலி!

 
UP

உத்தர பிரதேசத்தில் ஆட்டோ - டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக குளிர் வாட்டி வதைக்கிறது. வெப்பநிலை இயல்பைவிட குறைந்துள்ள நிலையில், சாலை முழுவதும் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. மேலும் பனிமூட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் கடும் பனியால் தொடர்ந்து சாலை விபத்துகள் நடைபெற்று வருகிறது.

Accident

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஜலாலாபாத் பகுதியில் இருந்து கங்கையில் நீராடுவதற்காக 12 பேரை ஏற்றி வந்த ஆட்டோ, அலகஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுக்சுகி கிராமத்திற்கு அருகே பரேலி - பரூக்காபாத் சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.

அப்போது ஆட்டோ சாலையின் தவறான பக்கத்தில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது அதிபயங்கரமாக மோதியதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் இருந்த 12 பேரும் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

Police

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்டு, போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அடர்ந்த மூடுபனி மற்றும் மோசமான பார்வை ஆகியவை விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web