டிசி வாங்க வந்த மாணவனை ஃபீஸ் கட்டச் சொல்லி அடித்துத் துவைத்த தலைமை ஆசிரியர்.. பரபர வீடியோ

 
Madhya pradesh

மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவனை தலைமை ஆசிரியர் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 11-ம் வகுப்பில் பயின்று வந்த மாணவன் தேர்வில் தோல்வியுற்றதாக கூறப்படுகிறது. தேர்வில் தோல்வி அடைந்ததை அடுத்து, பள்ளிப் படிப்பை நிறுத்திவிட மாணவன் முடிவு செய்தான். அதன்படி பள்ளிக்கு சென்ற மாணவன் தனக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டுள்ளான். 

beaten

அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவரிடம் பள்ளிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் பாக்கியுள்ளது என கூறியுள்ளார். மேலும் கட்டண பாக்கியை செலுத்தியதும் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக மாணவன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து, பள்ளியின் ப்ரின்சிபல் மற்றும் மேலும் இரண்டு ஆசிரியர்கள் சேர்ந்து கொண்டு மாணவனை கடுமையாக தாக்கினர். 

தொடர்ச்சியாக தாக்குதலுக்கு ஆளான மாணவன் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஆசிரியர்களை தள்ளி விட்டுள்ளான். பள்ளியில் இருதரப்பும் மோதிக் கொண்ட விவகாரம் காவல் நிலையம் சென்றடைந்தது. இடையே ஆசிரியர்களால் தாக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, காவல் நிலையத்தில் ஆசிரியர்கள் மீது புகார் அளித்தான்.   


இதே போன்று பள்ளி தலைமை ஆசிரியர் தரப்பிலும் மாணவன் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஹஜிரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். 

From around the web