பணிந்ததா பாஜக அரசு? சாதியவாரி கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் சொன்னது என்ன?

 
Stalin Stalin

சாதியவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று  ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், “மிகவும் தாமதப்படுத்தியும் மறுத்தும் வந்த ஒன்றிய அரசு இறுதியாக சாதியவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டுள்ளது.  ஆனால் இது எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி தொடர்கிறது. மேலும் பல முக்கிய கேள்விகளுக்கும் விடைகள் இல்லை. எப்போது தொடங்கும் எப்போது முடியும் என்ற விவரமும் இல்லை.

சமூகநீதி முக்கியத்துவம் வாய்ந்த பீகார் மாநிலத்தின் தேர்தல் நேரத்தில் வந்துள்ள இந்த அறிவிப்பு தற்செயலாக நடந்திருக்க வில்லை. இதே பிரதமர் முன்பு சாதியவாரி கண்க்கெடுப்பு கோரும் கட்சிகள் மக்களைப் பிளவுபடுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார். இபோது எதிர்க்கட்சிகளின் அதே கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளார்.

மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள்,  சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு சாதியவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியமானது. சமூகத்தின் உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது.

தமிழ்நாடு அரசு கடுமையாகப் போராடி இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினோம், பல கடிதங்கள் எழுதினோம், பல்வேறு தளங்களில் இந்தக் கோரிக்கையை தொடர்ந்து பிரதமருக்கு வலியுறுத்தி வந்தோம்.

மற்ற கட்சிகள் மாநில அரசு சாதியவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சொன்ன போது, ஒன்றிய அரசு தான் இதை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். ஒன்றிய அரசின் கணக்கெடுப்பு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் படி சட்டப்பூர்வமானது என்பதையும் வலியுறுத்தினோம்.

திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு கிடைத்த மற்றொமொரு மகத்தான வெற்றி” என்று கூறியுள்ளார்.

முதலமைச்சர் குறிப்பிட்டது போல் இது பீகார் தேர்தலுக்கான அறிவிப்பாக இருந்தாலும் விரைவில் ஒன்றிய அரசு இதை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் உடனே எழுந்துள்ளது.

From around the web