அரியானாவில் துப்பாக்கி ஏந்திய நபரை வீரமாய் விரட்டிய பெண்.. பரபரப்பு வீடியோ

 
Haryana

அரியானாவில் கையில் தென்னந் துடைப்பத்துடன் ஓடி வந்த ஒரு பெண், துப்பாக்கி வைத்திருந்த நபர்களை தாக்குவதற்காக பாய்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரியானா மாநிலம் பிவானி நகரின் டாபர் காலனியைச் சேர்ந்தவர் ஹரிகிஷன். நேற்று காலையில் இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் பைக்கில் வந்த 4 நபர்கள் அவரிடம் பேச்சு கொடுத்தனர். பேசிக்கொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த 2 பேர் திடீரென ஹரிகிஷனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதனால் ஹரிகிஷன் வீட்டுக்குள் ஓடினார். கேட் அருகில் சென்றபோது அவர் மீது தோட்டா பாய்ந்தது. தடுமாறி விழுந்த அவர், எப்படியோ சுதாரித்து உள்ளே சென்று கேட்டை பூட்டினார். தொடர்ந்து துரத்திய அந்த நபர்கள் கேட்டை திறக்க முயன்றனர்.

Haryana

அந்த சமயத்தில் கையில் தென்னந் துடைப்பத்துடன் ஓடி வந்த ஒரு பெண், துப்பாக்கி வைத்திருந்த நபர்களை தாக்குவதற்காக பாய்ந்து சென்றார். இதனால் அந்த நபர்கள் பைக்கில் தப்பிச் சென்றனர். துப்பாக்கியை கண்டும் பயப்படாமல், அந்த பெண் செய்த துணிச்சலான செயல் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஹரிகிஷன், ரோத்தக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முன்பகை காரணமாக ஹரிகிஷனை கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என தெரிகிறது.


தாதா கும்பலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஹரிகிஷன், ரவி பாக்சர் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ளார். அவர் மீது 3 மாதங்களுக்கு முன்பு சிலர் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். இது தொடர்பாக 5 பேரை பிவானி போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web