நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..! பதிவிறக்கம் செய்வது எப்படி?

 
NEET

2023-ம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

Neet

இந்த நிலையில், 2023-24-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மார்ச் 6-ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வந்த நிலையில் கடந்த மாதம் 13-ம் தேதி நிறைவு பெற்றது.

இந்த தேர்வுக்காக நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் ப்ளஸ்-2 முடித்த மாணவ - மாணவிகளும் ‘நீட்’ தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் நீட் தேர்வு மே 7ம் தேதி மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெற உள்ளது.

Neet

இந்நிலையில், இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட்டுகளை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து, மே 7-ம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 499 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.

From around the web