பேசுவதை குறைத்துக் கொண்ட காதலி.. விரக்தியில் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை!
கர்நாடகாவில் காதலி பேசுவதை குறைத்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா நஞ்சப்புரா பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷித் (24). இவர் துமகூருவை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் அந்த பெண்ணை, அவரது மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே ஹர்ஷித்திற்கு பல புதிய எண்களில் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. அப்போது பேசிய மர்மநபர், ஹர்ஷித்தின் காதலியை தான் திருமணம் செய்ய உள்ளதாகவும், அவளை தொந்தரவு செய்ய கூடாது எனவும் மிரட்டி உள்ளார். அவரது காதலியும் ஹர்ஷித்திடம் பேசுவதை குறைத்து கொண்டார்.
இதனால் ஹர்ஷித் மனமுடைந்தார். வீட்டில் தனியாக இருந்தபோது தனது கையை அறுத்து, அதனை புகைப்படம் எடுத்து தனது காதலி மற்றும் அவரது தாய்க்கு அனுப்பினார். மேலும் தூக்குப்போட்டு தற்கொலையும் செய்து கொண்டார். இதுகுறித்து ஹர்ஷித் குடும்பத்தினர் உடனடியாக ஹெப்பகோடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஹர்ஷித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் விசாரணை நடத்தினர். அதன்பேரில் ஹர்ஷித்தின் காதலி, காதலியின் அத்தை கவிதா, மாமா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.