தெலுங்கானாவில் வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்கள்.. 20 குடிசைகள் நாசம்.. அச்சத்தில் மக்கள்!

 
Telangana

தெலுங்கானாவில் நேற்று காலை கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் 20 குடிசைகள் எரிந்து நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் 4 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் அருகில் இருந்த குடிசைகள் பற்றி எரிந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Telangana

இந்த விபத்து குறித்து கரீம் நகர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் டி.வெங்கண்ணா கூறுகையில், “விபத்து குறித்து தொலைபேசி அழைப்பு வந்ததுமே சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டோம்.

நகராட்சியிடம் தண்ணீர் டேங்கர் உதவியை கோரினோம். தொடர்ந்து போராடி தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் சுமார் 20 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. 4 அல்லது 5 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துள்ளன. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை” என்றார். இந்த விபத்து குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.


முன்னதாக, தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள கொண்டூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரும்பு உருக்கும் ஆலையில் வெடி விபத்து நேரிட்டது. இதில் 3 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள்ளாக தற்போது கரீம் நகரில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web