10-ம் வகுப்பு தேர்வு முடிந்து கொண்டாட சென்ற நண்பர்கள்.. கடற்கரையில் மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

 
puducherry

புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு முடித்துவிட்டு நண்பர்களுடன் குளிக்க சென்ற போது கடலில் மூழ்கி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி யூனியன் முதலியார்பேட்டை அவ்வை நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் மணிமாறன் (52). பெயிண்டரான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஜீவகன் (14) என்ற மகனும், அனுஷ்கா (10) என்ற மகளும் உள்ளனர். இதில் ஜீவகன் புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள அந்தோணியார் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். 

Jeevagan

இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதை கொண்டாடும் வகையில் ஜீவகன் தனது நண்பர்கள் 5 பேருடன் வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரினா பகுதிக்கு குளிக்கச் சென்றார். பாண்டி மெரினா முகத்துவார பகுதியில் நண்பர்களுடன் குளித்தபோது ஜீவகன் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. 

அப்போது அவர் கடலில் மூழ்க தொடங்கினார். இதனை கண்டவுடன் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர். அப்போது அங்கு கடலில் ரோந்து வந்த இந்திய கடலோர காவல் படையை சேர்ந்தவர்கள் ஜீவகனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இருப்பினும் பலனின்றி ஜீவகன் பரிதாபமாக உயிரிழந்தார். 

Mudaliarpet PS

இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 10-ம் வகுப்பு தேர்வு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் குளிக்க சென்ற மாணவன் கடலில் மூழ்கி பலியான சம்பவம் முதலியார்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

From around the web