18,000 மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. விழாவில் புதுச்சேரி ஆளுநர், முதல்வர் பங்கேற்பு

 
Puducherry

புதுச்சேரியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி ஆகியோர் இன்று தொடக்கி வைத்தனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் கடந்த பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் இயங்காததை அடுத்து, இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் தமிழ்நாட்டில் நிதி நெருக்கடி காரணமாக இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

Puducherry

இந்த நிலையில் புதுச்சேரி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச மிதிவண்டி, சீருடை வழங்கப்படுவதைப் போல மடிக்கணினியும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது. இதை ஏற்று கடந்த அக்டோபர் மாதம் புதுச்சேரியில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இத்திட்டத்திற்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.

Puducherry

இந்த ஆண்டு 18,000 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படுவதாக புதுச்சேரி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிதி பிரச்சினை காரணமாக மடிக்கணினி வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியைப் போல மீண்டும் இத்திட்டம்தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது.

From around the web