ஒரே பைக்கில் சென்ற 4 மாணவர்கள் பரிதாப பலி.. தேர்வு வெற்றியை கொண்டாடிய சில மணி நேரத்தில் நிகழ்ந்த சோகம்!

 
Telangana

தெலுங்கானாவில் சாலை விபத்தில் இடைநிலை கல்வி பயிலும் 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எம்.சித்து, பி.கணேஷ், வருண் தேஜ், பி.ரணில் குமார். இவர்கள் 4 பேரும் இடைநிலை கல்வி பயின்று வந்தனர். அம்மாநிலத்தில் இடைநிலை கல்வி என்பது 11 மற்றும் 12-ம் வகுப்பை குறிக்கிறது. இவர்கள் நால்வருமே 17 வயது பிரிவினர் ஆவர்.

Accident

இந்த நிலையில் தெலங்கானா இடைநிலை கல்வி தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து 4 மாணவர்களும் தேர்வு வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். நேற்று இரவு 4 மாணவர்களும் ஒரே பைக்கில் ஹோட்டலுக்குச் சென்று உணவருந்திவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

வாரங்கல் - கம்மம் நெடுஞ்சாலையில் உள்ள வர்தன்னபேட்டை புறநகர் பகுதியில் வந்தபோது மாணவர்கள் சென்ற பைக், எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Police

படுகாயமடைந்த மற்றொரு மாணவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வில் வெற்றி பெற்றதை கொண்டாடிய மாணவர்கள், விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web