ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி.. ஆட்டிறைச்சி சாப்பிடவர்களுக்கு நிகழந்த சோகம்!
கர்நாடகாவில் ஆட்டிறைச்சி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், சிர்வார் தாலுகாவில் உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பீமன் (60). இவர் குடும்பத்தினருடன் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு ஆட்டிறைச்சியை சமைத்து பீமன் குடும்பத்தினர் சாப்பிட்டுள்ளனர். இன்று காலை அவர்கள் யாரும் எழுந்திருக்கவில்லை.
இந்த நிலையில், பக்கத்து வீட்டினர் வந்து பார்த்த போது பீமன், அவரது மனைவி ஈரம்மா (54), மகன் மல்லேஷ்(19), மகள் பார்வதி (17) ஆகியோர் இறந்து கிடந்தனர். பீமனின் மற்றொரு மகளான மல்லம்மா (18) உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிர்வார் காவல் நிலைய போலீசார், உயிரிழந்த பீமன் குடும்பத்தினரின் உடல்களைப் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் சாப்பிட்ட ஆட்டிறைச்சியில் பல்லி விழுநதிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.