ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை.. காதலை மறுத்த பெண்ணுக்கு கொடூரம்!
கர்நாடகாவில் தன்னை காதலிக்க மறுத்த பெண் உள்பட 4 பேரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் சந்தகட்டே பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது. இவரது மனைவி ஹசீனா (46). இவர்களுக்கு முகமது அசாத் (26), அசீம் (14) என்ற இரண்டு மகன்களும், அப்னான் (23), அய்னாஸ் (21) என்ற இரண்டு மகள்களும் இருந்தனர். கடந்த 30 ஆண்டுகளாக நூர் முகமது துபாயில் வேலை பார்த்து வந்தார். முகமது அசாத்தும், அப்னான்னும் பெங்களூரில் தனி அறை எடுத்து அதில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதியின் இரண்டாவது மகளான அய்னாஸ் ஏர் இந்தியா கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடைசி மகனான அசீம் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி தீபாவளி பண்டிகையொட்டி அப்னான் மட்டும் பெங்களூரில் இருந்து தனது வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, அந்த வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், அப்னானை தான் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்ட ஹசீனாவும், அய்னாஸும் ஓடி வந்து பார்த்தனர். அங்கு வந்த அவர்களையும், அந்த கொலையாளி கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தார்.
வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அசீம் வீட்டுக்கு ஓடி வந்து பார்த்தான். அப்போது அந்த நபர், சிறுவன் அசீமையும் சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்தார். 4 பேரையும் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்த அந்த மர்ம நபர், ஹசீனாவின் மாமியாரையும் மிரட்டி கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த அவர் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் ஓடி வந்தனர். அவர்கள் ஓடி வருவதற்குள், அந்த மர்ம நபர் அந்த வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார்.
இதனையடுத்து, அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், ஹசீனாவின் மாமியாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது குறித்து போலீசார் 5 தனிப்படை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில், பிரவீன் அருண் (36) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அய்னாஸ் பணிபுரிந்து வரும் ஏர் இந்தியா கம்பெனியில் பிரவீன் அருண் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், பிரவீன் அருண் தான் திருமணமானவர் என்பதை மறைத்து அய்னாஸை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பிரவீன் அருண், திருமணமானவர் என்பதனை தெரிந்து கொண்ட அய்னாஸ் அவரை விட்டு விலகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் வேதனையடைந்த பிரவீன் அருண், அய்னாஸை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த 12-ம் தேதி அய்னாஸின் வீட்டுக்கு சென்ற பிரவீன், அந்த குடும்பத்தில் உள்ள 4 பேரையும் கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.