முன்னாள் வனத்துறை அமைச்சர் கேபி விஸ்வநாதன் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

 
 KP Viswanathan

மூத்த காங்கிரஸ் தலைவரும் கேரள முன்னாள் அமைச்சருமான கே.பி.விஸ்வநாதன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 83.

1940-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பிறந்த விஸ்வநாதன், திருச்சூர் கேரள வர்மா கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். இளைஞர் காங்கிரஸ் மூலம் அரசியலில் நுழைந்த இவர், 1967 முதல் 1970 வரை திருச்சூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக பணியாற்றினார்.

இவர் 1977, 1980-ம் ஆண்டுகளில் குன்னம்குளம் தொகுதியிலிருந்தும், பின்னர் 1987, 1991, 1996, 2001-ம் ஆண்டுகளில் கொடகரா தொகுதியிலிருந்தும் கேரள சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 KP Viswanathan

1991 ஜூலை முதல் நவம்பர் 1994 வரை கே.கருணாகரன் தலைமையிலான அமைச்சகத்திலும், செப்டம்பர் 2004 முதல் பிப்ரவரி 2005 வரை உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவையிலும் வனத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஸ்வநாதன் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9 மணி அளவில் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் திருச்சூரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் நாளை அவரது உடல் தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


விஸ்வநாதனின் மறைவுக்குக் கேரள பேரவைத் தலைவர் ஏஎன் ஷம்சீர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

From around the web