ஹோட்டலுக்கு சென்ற 5 பேருக்கு திடீர் ரத்த வாந்தி.. Mouth Freshener சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்!

 
Delhi

டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் மவுத் ஃப்ரெஷனரை பயன்படுத்திய 5 பேர், ரத்த வாந்தி எடுத்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி குருகிராம் செக்டார்-90 பகுதியில் லாஃபோரெஸ்டா என்ற ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலுக்கு கடந்த 2-ம் தேதி, அங்கித் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் சாப்பிடுவதற்காகச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்பு, வாய் புத்துணர்ச்சி பெறுவதற்காக, அங்கிருந்த மவுத் ஃப்ரெஷனரை எடுத்து உபயோகித்துள்ளனர்.

அதை உபயோகித்த அவரது குடும்பத்தினர் அனைவரும் வாயில் ஏற்பட்ட எரிச்சலால் அவதிப்பட்டு உள்ளனர். அதில் பெண் ஒருவர், ‘எரிகிறது’ என்று திரும்பத் திரும்பக் கூச்சலிடுகிறார். அதில் ஒருத்தர் ரத்த வாந்தி எடுத்தார். இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Delhi

அவர்கள் வலியால் துடிப்பதைப் பார்த்த ஒருவர், இங்கு அனைவரும் வாந்தி எடுத்தனர். அவர்களின் நாக்கில் கீறல்கள் இருந்தன. எரிச்சலால் அவஸ்தைப்பட்டனர். அவர்களுக்கு என்ன கொடுக்கப்பட்டது என தெரியவில்லை. அதில் ஒருத்தர் என்னை போலீசுக்கு போன் பண்ணச் சொன்னார் எனத் தெரிவித்துள்ளார்.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. புகாரின் பேரில் கைப்பற்றப்பட்ட அந்த மவுத் ஃப்ரெஷனரை எடுத்துக் கொண்டுபோய் மருத்துவரிடம் காட்டியுள்ளனர். அவர் அதைப் பார்த்துவிட்டு, ’இது மரணத்திற்கு வழிவகுக்கும் அமிலம்’ எனத் தெரிவித்துள்ளார். தற்போது இதனால் பாதிக்கப்பட்ட அந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


அவர்களில் இருவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் உணவகத்தின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web