ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடுத்தடுத்து மர்ம மரணம்.. மருகள் உள்பட 2 பேர் கைது.. மகாரஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!
மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை ஸ்லோ பாய்சன் வைத்து கொலை செய்த அதே குடும்பத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் கத்சிரோலி அடுத்துள்ள மகாகான் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி விஜயா. இந்த தம்பதிக்கு ரோஷன் என்ற மகனும், 1 மகள் உள்ளனர். இந்த சூழலில் இவர்களுடன் விஜயாவின் சகோதரி வர்ஷா ஆகிய 5 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சங்கரின் மகன் ரோஷன், சங்கமித்ரா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் காதலுக்கு அந்த பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டை விட்டு வந்து ரோஷனை திருமணம் செய்துகொண்டு அதே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த மாதம் ரோஷனின் தாய் - தந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் ஒரே நாளில் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து ரோஷன், அவரது சகோதரி மற்றும் வர்ஷா ஆகியோருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு அடுத்தடுத்தது 2 நாட்களில் உயிரிழந்தனர். தொடர்ந்து ஓரே குடும்பத்தில் 20 நாட்களில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், தங்கள் விசாரணையில் இறங்கினர். அப்போது ரோஷனின் மனைவி சங்கமித்ரா மீது சந்தேகம் திரும்பியது.
தொடர்ந்து நடந்த விசாரணையில், அவர்கள் இறப்புக்கு சங்கமித்ரா தான் காரணம் என கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. அதாவது, ரோஷனின் மனைவி சங்கமித்ரா, தனது குடும்பத்துடன் பேசுவது ரோஷனின் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. மேலும் அவரது தந்தை இறப்புக்கும் சங்கமித்ராவை செல்ல அனுமதிக்கவில்லை.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். தொடர்ந்து சில நாட்கள் கழித்து ரக்சா பந்தன் அன்றும் அவரது சகோதரனை பார்க்க அனுமதி கேட்டபோது, ரோஷன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளர். மேலும் அவரை தாக்கியும் உள்ளார். இதனால் சங்கமித்ரா மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார். இந்த சமயத்தில் அங்கு வந்த சங்கரின் அண்ணியான ரோஜா என்பவர், அவரை தூண்டிவிட்டுள்ளார்.
மேலும் தனது கணவருக்கு வரவேண்டிய சொத்தை கூட இவர்கள் அபகரித்து விட்டதாக ரோஜா கூறவே, தனது குடும்பத்தின் மீது மேலும் கோபம் வந்த சங்கமித்ராவும் சேர்ந்து இதற்காக பழிவாங்க வேண்டும் என்றும் இருவரும் திட்டமிட்டனர். அதன்படி கூகுளில் தேடி ‘தாலியம்’ என்று சொல்லப்படும் ஸ்லோ பாய்சன் குறித்த விவரம் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த விஷத்தை வாங்கிய சங்கமித்ரா, தனது குடும்பத்தினர் சாப்பாட்டில் கலந்து கொடுத்துள்ளார். இந்த ஸ்லோ பாய்சனால் நோய்வாய்ப்பட்டு இறப்பர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் எழாது என்ற எண்ணத்தில் இதனை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து சங்கமித்ரா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ரோஜா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.