பரபரப்பான சூழலில் 18-வது மக்களவை முதல் கூட்டத் தொடர்.. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் எம்பிக்கள் பதவியேற்பு

 
Parliament

18-வது மக்களவைவின் முதலாவது கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஜூலை 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

18-வது நாடாளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை அமைத்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 234 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் மீண்டும் அமர்ந்துள்ளது. நாட்டின் பிரதமராக 3-வது முறையாக மோடி ஜூன் 9-ம் தேதி பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து 18-வது மக்களவையின் முதலாவது கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும். லோக்சபாவின் தற்காலிக சபாநாயகராக ஒடிசா மாநில பாஜகவைச் சேர்ந்த பர்த்ருஹரி மகதாப் நியமிக்கபட்டுள்ளார். இவர் 7 முறை லோக்சபா எம்பியாக தேர்வானவர். ஆனால் 8 முறை எம்பியான கேரளா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ், தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படவில்லை என்கிற சர்ச்சை நீடிக்கிறது. 

New speaker

அதே நேரத்தில் புதிய எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்கு தற்காலிக சபாநாயகருக்கு உதவ கொடிக்குன்னில் சுரேஷ் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (திமுக), ராதா மோகன் சிங் (பாஜக), பகன்சிங் குலஸ்தே (பாஜக) சுதிப் பந்தோபாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்காலிக சபாநாயகர் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த குழுவில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் இடம் பெறாமல் புறக்கணிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மக்களவை தொடங்குவதற்கு முன்னராக குடியரசு தலைவர் மாளிகையில் தற்காலிக சபாநாயகருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து மக்களைவை கூட்டம் முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். பின்னர் இன்றும் நாளையும் புதிய எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். முதலில் பிரதமர் மோடி பதவியேற்பார். இதனையடுத்து தற்காலிக சபாநாயகருக்கு உதவியாக நியமிக்கப்பட்ட எம்பிக்கள் பதவியேற்பர். பின்னர் ஒன்றிய அமைச்சர்கள் பதவியேற்க இருக்கின்றனர்.

முதல் நாளான இன்று மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 280 எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். தமிழ்நாட்டின் 39 எம்பிக்கள் உள்ளிட்டோர் நாளை பதவியேற்பர். இதனைத் தொடர்ந்து ஜூன் 26-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். சபாநாயகர் பதவியை பாஜகவே தக்க வைக்கும் என தெரிகிறது. ஆனால் மத்தியில் ஆட்சி அமைக்க உதவிய தெலுங்குதேசமும் ஐக்கிய ஜனதா தளமும் சபாநாயகர் பதவியை கேட்டு அடம்பிடிக்கின்றன. இன்னொரு பக்கம் இந்தியா கூட்டணி சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்துமா? என்பதும் எதிர்பார்ப்பு.

Modi

மேலும் ராஜ்யசபா ஜூன் 27-ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் லோக்சபா, ராஜ்யசபா இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றும் போது நீட், நெட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை இந்தியா கூட்டணி கட்சிகள் எழுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர் இரு சபைகளிலும் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும்.

ஜூலை 2-ம் தேதி மக்களவைவில் பிரதமர் மோடி முதல் முறையாக உரையாற்றுவார். ஜூலை 3-ம் தேதியுடன் 18-வது மக்களவைவின் முதலாவது கூட்டத் தொடர் நிறைவடையும். இதையடுத்து ஒன்றிய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய ஜூலை 22-ம் தேதி 2-வது கூட்டத் தொடர் தொடங்கக் கூடும்.

இன்று மக்களவை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று புதிய தொடக்கம். நாடு விடுதலைக்குப் பின்னர் முதல் முறையாக நாம் கட்டிய நமக்குச் சொந்தமான புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். வழக்கமாக எம்பிக்கள் நாடாளுமன்ற பழைய கட்டிடத்தில்தான் பதவியேற்று வந்தனர். புதிய எம்பிக்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன் என்றார்.

From around the web