வாக்குச்சாவடியில் துப்பாக்கிச் சூடு... நாகலாந்து சட்டமன்றத் தேர்தலில் பதற்றம்!!

 
Nagaland

நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், சில வாக்குப்பதிவு மையங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்நாடு, ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் வாக்கை செலுத்தி வருகின்றனர். இரு மாநிலங்களிலும் தலா 60 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மேகாலயாவில் 21 லட்சம் பேரும், நாகாலாந்தில் 13 லட்சம் பேரும் வாக்களிக்க உள்ளனர்.

Poll

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகியவை எல்லை பகுதியை ஒட்டியுள்ள பதற்றமான மாநிலங்கள். எனவே 119 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், வங்கதேசம் உடனான மேகாலயாவின் சர்வதேச எல்லையை மார்ச் 2-ம் தேதி வரை சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி சில மணிநேரங்களே ஆன நிலையில், நாகாலாந்தில் துப்பாக்கிச் சூடு வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அம்மாநிலத்தின் பந்தாரி வாக்குப்பதிவு மையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தேசிய மக்கள் கட்சி  ஊழியர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Nagaland

அதேபோல், உமாபஸ்தி என்ற பகுதியில் உள்ள அலோக்தகி வாக்குப்பதிவு மையத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வன்முறை சம்பவம் பதிவான இடங்களுக்கு பாதுகாப்பு படையினர் விரைந்துள்ள நிலையில், நிலைமையை சீர்செய்து வாக்குப்பதிவை சுமூகமாக நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

From around the web