பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து.. அடுத்தடுத்து 4 கடைகள் எரிந்து நாசம்!

 
Telangana

தெலுங்கானாவில் நேற்று இரவு பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் 4 கடைகள் எரிந்து நாசமானது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. அந்த வகையில், தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், ராஜேந்திரா நகரில் உள்ள சன்சிட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு விற்பனை கடை உள்ளது. தற்போது தீபாவளி நேரம் என்பதால் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது.

Telangana

நேற்று இரவு விற்பனை முடிந்து ஊழியர்கள் பட்டாசு கடையை மூடிவிட்டு சென்றனர். இந்நிலையில் நள்ளிரவில் மின்கசிவு காரணமாக பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி அருகில் உள்ள குடோனுக்கு பரவியது. பின்னர் அதன் அருகில் இருந்த ஓட்டலுக்கு தீ பரவியதால் அங்கிருந்த சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

இதனால் பட்டாசு கடைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் நள்ளிரவில் வெடிகுண்டு வெடித்ததாக பீதி அடைந்து அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடினா்.


தீ மேலும் மளமளவென பரவி அருகில் இருந்த மேலும் 4 கடைகள் எரிந்து நாசமானது. கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு கடைகளின் சுவர்களை உடைத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து ராஜேந்திரா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web