எலக்ட்ரிக் பைக் ஷோருமில் தீ விபத்து.. பெண் ஊழியர் பரிதாப பலி.. அதிர்ச்சி வீடியோ

 
Bangalore

கர்நாடகாவில் மின்சார பைக் ஷோ ரூம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரின் வடக்குப் பகுதியில் உள்ள நவ்ரங் பார் ஜங்க்‌ஷனில் பிரபல மின்சார வாகனத்தின் ஷோரூம் உள்ளது. நகரின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான இடம் என்பதால் எப்போதும் பரபரப்பாக இந்த இடம் காட்சி அளிக்கும். நேற்று மாலை 5.30 மணியளவில் வழக்கம் போல ஷோ ரூமில் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டு இருந்தனர்.

Bangalore

அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது. தீ பிடித்ததும் அலறியடித்துக்கொண்டு ஊழியர்கள் ஷோ ரூமை விட்டு வெளியேறினர். உடனடியாக தீ அணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீ அணைப்பு படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு ஷோ ரூமிற்குள் தீ அணைப்பு வீரர்கள் சென்று பார்த்தனர். அப்போது தீ விபத்தில் சிக்கி இளம்பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் பிரியா (20) என்பதும், ஷோ ரூமில் ஊழியராக பணியாற்றியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்தில் ஷோ ரூமில் இருந்த 50 எலக்ட்ரிக் பைக்குகள் தீயில் கருகி நாசமாகின.


தீ விபத்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் இருந்த கடைகளும் மூடப்பட்டன. அங்கிருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து காரணமாக ஷோ ரூம் அமைந்துள்ள ராஜ்குமார் சாலை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

From around the web