சிறுத்தையுடன் கட்டி புரண்டு சண்டை.. பைக்கில் கட்டி தூக்கி வந்த இளைஞர்... பதறவைக்கும் காட்சி!!

 
Karnataka

கர்நாடகாவில் தன்னை தாக்கிய சிறுத்தையிடம் சண்டையிட்ட நபர் அதன் கால்களை கயிற்றால் கட்டி பைக்கில் கொண்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பாகிவாலு கிராமத்தில் வசித்து வருபவர் வேணுகோபால் என்ற முத்து. இவருக்கு கிராமத்தையொட்டிய பகுதியில் தோட்டம் உள்ளது. இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வேணுகோபால் வழக்கம்போல் தனது தோட்டத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் பாதையில் மக்கள் நடமாட்டம் என்பது அதிகமாக இருக்காது.

அப்போது புதருக்குள் மறைந்து இருந்த சிறுத்தை ஒன்று திடீரென்று பாய்ந்து வந்து அவரை தாக்கியது. இதனால் அவர் பதறிப்போய் கீழே விழுந்தார். சிறுத்தை அவரை தொடர்ந்து தாக்கியது. இதனால் வேணுகோபால் அலறி துடித்தார். மேலும் ஆக்ரோஷமான வேணுகோபால் தைரியத்தை வரவழைத்து கொண்டு சிறுத்தையிடம் எதிர்த்து சண்டையிட்டார்.

Leopard

பின்னர் தன்னை தாக்க வந்த சிறுத்தையை அவர் பிடித்து கயிற்றால் கால்களை கட்டினார். இதனால் சிறுத்தையால் நகர முடியவில்லை. இதையடுத்து அவர் சிறுத்தையை தனது பைக்கின் பின்பகுதியில் கட்டி தொங்கவிட்டபடி கிராமத்துக்கு சென்றார். சிறுத்தையுடன் அவர் செல்வதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அவர்களிடம் நடந்த சம்பவத்தை வேணுகோபால் விளக்கி கூறினார். இதையடுத்து சிறுத்தை தாக்குதலில் காயமடைந்த அவருக்கு கிராம மக்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை மீட்டனர். அதன்பிறகு சிறுத்தைக்கு கண்டாசி கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், “வனவிலங்குகளை காயப்படுத்துவது என்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால் வேணுகோபால் தனது உயிரை பாதுகாக்கும் வகையில் இதனை செய்துள்ளார்” என்றனர்.

From around the web