குழந்தையின் சடலத்துடன் பேருந்தில் 200 கிமீ பயணம் செய்த தந்தை.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்!!

 
West Bengal

மேற்கு வங்கத்தில் 5 மாத குழந்தையின் சடலத்தை 200 கி.மீ தூரம் பேருந்து மூலம் எடுத்து வந்த அவலம் நிகழ்ந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் அஷிம் தேப்சர்மா. இவரது மனைவிக்கு 5 மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு கடந்த வாரம் தீவிர உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக சிலிகுரி பகுதியில் உள்ள நார்த் பெங்கால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை கொண்டு சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

சுமார் 6 நாள் தீவிர சிகிச்சைக்குப் பின்னருக்கும் குழந்தையின் உடல் நிலை முன்னேற்றம் அடையாத நிலையில், அக்குழந்தை மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துவமனைக்கும் அஷிம் வீடு இருக்கும் பகுதிக்கும் சுமார் 200 கிமீ தூரம் என்பதால், குழந்தையின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸை அனுகியுள்ளார். 

West Bengal

கடந்த 6 நாள் சிகிச்சையில் அஷிம் 16 ஆயிரம் ரூபாய் செலவு செய்த நிலையில், மேலும் பணம் இல்லாத காரணத்தால் இலவச ஆம்புலன்ஸ் சேவையை அவர் எதிர்பார்த்துள்ளார். ஆனால், அங்கிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களோ 8 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் வர முடியும் என்று முரண்டு பிடித்துள்ளனர். 

எனவே, வேறு வழியின்றி அஷிம் பேருந்து மூலம் தனது குழந்தையின் உடலை எடுத்துக்கொண்டு ஊருக்கு செல்ல முடிவு செய்தார். சடலத்தை பார்த்தால் பேருந்தில் பயணிக்க விடமாட்டார்கள் என்று கருதி, தனது குழந்தையின் உடலை ஒரு பையில் வைத்து மறைத்து சுமார் 200 கிமீ தூரம் பேருந்திலேயே வந்துள்ளார்.


இந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், எதிர்க்கட்சி தலைவரான பாஜகவின் சுவேந்து அதிகாரி ஆளும் திரிணாமுல் அரசின் மீது கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளார். அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டம் ஏன் இவருக்கு உதவவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திரிணாமூல் அரசின் மோசமான ஆட்சியின் உண்மை நிலையை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது என விமர்சனம் செய்துள்ளார். அதேவேளை, இந்த விவகாரத்தில் பாஜக மட்டமான அரசியலை செய்கிறது என திரிணாமுல் எம்பி சாந்தனு சென் பதில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

From around the web