16 வயது மகளை குத்தி கொன்று பைக்கில் கட்டி இழுத்து சென்ற கொடூர தந்தை.. அதிர்ச்சி வீடியோ!

 
Punjab

பஞ்சாபில் 16 வயது மகளை கொன்று கயிறு கட்டி அரை கிலோமீட்டருக்கு சாலையில் இழுத்துச் சென்ற தந்தை, சடலத்தை தண்டவாளத்தில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள முச்சல் கிராமத்தில் வசித்து வருபவர் பாவ் என்ற தல்பீர் சிங். இவர் தனது பெற்றோர், மனைவி மற்றும் 5 குழந்தைகளோடு வசிந்து வந்தவர். சீக்கியர்களின் அடிப்படைவாதிகளான நிஹாங் பிரிவைச் சேர்ந்த இவர், அவர்கள் மத்தியில் வெளிப்படும் கொடூரச் செயலை தனது சொந்தக் குடும்பத்தில் அரங்கேற்றி இருக்கிறார்.

4 மகள், ஒரு மகன் என 5 வாரிசுகளை உடைய பாவின் குடும்பத்தில், 3வது மகள் கடந்த புதன்கிழமையன்று திடீரென மாயமானார். வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் அந்த 16 வயது சிறுமி வெளியே சென்றதில் தந்தை பாவ் சீற்றமடைந்தார். சரியாக ஒரு நாள் கழித்து வியாழனன்று அந்த பெண் வீட்டுக்குத் திரும்பி வந்தார்.


ஒரு தகப்பனாக பெற்ற மகளிடம், ‘எங்கே சென்றாய்; ஏன் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை?’ என்பது உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பினார் பாவ். மகள் மௌனம் சாதிக்கவே எந்த தகப்பனும் துணியாத காரியத்தை அடுத்து அவர் அரங்கேற்றினார். கைவசமிருந்த கூர்மையான ஆயுதத்தால் மகளை ஆத்திரம் தீரக் குத்திக் கொன்றார்.

நடந்த சம்பவம் குறித்து குடும்பத்தில் எவரேனும் வெளியே கூறினால் அவர்களுக்கும் இதே கதி தான் என்று மிரட்டிய பாவ், மகளின் சடலத்தை பைக்கில் கட்டி வெளியே இழுத்துச் சென்றார். சடலத்தை பிணைத்த கயிறை பைக்கில் கட்டியவர், தரதரவென சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு கிராமத்தின் சாலைகளில் உயிரிழந்த மகளை இழுத்து சென்றார்.

punjab

நிறைவாக ஊர் எல்லையில் இருந்த தண்டவாளத்தில் மகள் சடலத்தை வீசிவிட்டு தலைமறைவானார். அவரது குடும்பத்தினர் அச்சத்தில் வாய் மூடியிருந்த போதும், ஊருக்குள் நேரில் பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றினர்.

பாவ் குடும்பத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் சிசிடிவி பதிவுகள், பாவ் நிகழ்த்திய பகீர் கொலையின் பின்னணியை உறுதி செய்தது. பெற்ற மகளை கொன்று விட்டு தலைமறைவாக இருக்கும் தந்தையை பிடிக்க பஞ்சாப் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

From around the web