2 வயது குழந்தையைத் தரையில் அடித்துக் கொன்ற தந்தை.. தலைக்கேறிய போதையால் நடந்த கொடூரம்!
உத்தரப்பிரதேசத்தில் குடிபோதையில் மகளை அடித்துக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஷ்ரஃப். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சைஸ்தா என்பவரை திருமணம் செய்துள்ளார். இரண்டு குழந்தைகளின் தாயான சைஸ்தா ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அஷ்ரஃப் மற்றும் சைஸ்தா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
குடிபோதைக்கு அடிமையான அஷ்ரஃப் அடிக்கடி சைஸ்தாவையும், குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அஷ்ரஃப், மனைவி மற்றும் 2 மகள்களையும் கொடூரமாக தாக்கினார். 2 வயது குழந்தையை ஓங்கி தரையில் பலமுறை அடித்தார்.
இதே போல 3 வயது பெண் குழந்தை மற்றும் அவரது மனைவி சைஸ்தா ஆகியோரையும் கடுமையாக தாக்கியுள்ளார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, சைஸ்தா மற்றும் அவரது 2 மகள்களும் மயங்கிக் கிடந்தனர். அவர்களை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 3 வயது குழந்தை மாவட்ட மருத்துவமனையில் தனது தாயுடன் உயிருக்குப் போராடி வருகிறது. இறந்த குழந்தையின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.