விவசாயிகள் போராட்டம்.. ரப்பர் குண்டு பாய்ந்து 21 வயது இளைஞர் பலி!

 
Shambhu

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 21 வயது விவசாயி ஒருவர் ரப்பர் குண்டு பாய்ந்ததில் உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசுடனான 4-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலியாக டெல்லி நோக்கிய விவசாயிகள் போராட்டம் இன்று தீவிரமடைந்தது. பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் டிராக்டர்களில் குவிந்தனர். டெல்லிக்குள் நுழைய முடியாதவாறு ஷம்பு எல்லையில் போலீஸார் விவசாயிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். முன்னேற முயலும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போலீசார் அவர்களை தடுத்து வருகின்றனர். இருப்பினும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து முன்னேறி வருவதால், அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.

Shambhu

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 21 வயது இளம் விவசாயி சுப்கரன் சிங் மீது போலீஸார் சுட்ட ரப்பர் குண்டுகள் பாய்ந்ததில் அவர் மயங்கி விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த சுப்கரன் சிங்கை உடனிருந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் காயம் காரணமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த தகவலை பாரதிய கிசான் சங்கத்தின் துணைத் தலைவரான குருவேந்தர் சிங் பலு உறுதி செய்துள்ளார். போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் சுப்கரன் சிங் உயிரிழந்திருப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த உயிரிழப்பின் மூலமாக இதுவரை மூன்று விவசாயிகள் இந்த போராட்டத்தில் உயிரிழந்து உள்ளனர். கடந்த 16-ம் தேதி 79 வயது விவசாயி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனிடையே சுப்கரன் சிங் ரப்பர் குண்டுக்கு பலியான தகவலை அரியாணா போலீசார் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து அரியாணா போலீசார் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ”எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி இன்று விவசாயிகள் யாரும் போராட்டத்தில் உயிரிழக்கவில்லை. இது வெறும் வதந்தி. 2 போலீஸ்காரர்கள் மற்றும் ஒரு போராட்டக்காரர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

From around the web