பிரபல தாதா போலீசார் கண்முன்னே சுட்டுக் கொலை... 144 தடை உத்தரவு... உத்தர பிரதேசத்தில் பயங்கரம்! பரபரப்பு வீடியோ

உத்தர பிரதேசத்தில், பிரபல அரசியல்வாதியுமான ஆதிக் அகமது, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிக் அகமது. இவர் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளில் பொறுப்பு வகித்துள்ளார். இவர், 5 முறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை எம்பியாகவும் இருந்துள்ளார். பிரபல ரவுடியாக இருந்து அரசியலுக்குள் நுழைந்த ஆதிக் அகமது மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் தான், வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில், ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்றிரவு, இருவரும் நீதிமன்றத்தில் இருந்து பிரயாக் ராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது அங்கு குழுமியிருந்த பத்திரிகையாளர்கள் ஆதிக் அகமதுவிடம் பேட்டி எடுக்க முயன்றனர். பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டே இருவரும் சென்றபோது, கூட்டத்தில் நின்றிருந்த நபர்கள், ஆதிக் அகமதுவை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அடுத்தடுத்து துப்பாக்கிக் குண்டுகள் உடலைத் துளைக்க, ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆதிக் அகமதுவும், அவரது சகோதரரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போது நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. உமேஷ் பால் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் அகமது கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டார். தனது மகனின் இறுதிச்சடங்கு நடந்த அன்றே அத்திக் அகமதுவும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பிரபல மாபியா கும்பலின் தலைவனான ஆதிக் அகமதுவின் படுகொலை மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அவசர உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இதே போன்று, பிரயாக் ராஜ் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆதிக் அகமதுவை சுட்டுக்கொன்ற 3 பேரும், அங்கிருந்த போலீசாரிடம் உடனடியாக சரண் அடைந்தனர். லேவ்லீன் திவாரி, அருண் மற்றும் சன்னி ஆகிய அந்த 3 பேரைப் பற்றிய பல்வேறு அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன. பல நாட்கள் திட்டம் தீட்டி செயல்படுத்தப்பட்ட படுகொலை என தெரிவித்துள்ள போலீசார், குற்றவாளிகள் மூவரும் பத்திரிகையாளர்களைப் போல் கூட்டத்தில் நுழைந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக தெரிவித்துள்ளனர்.
#AtiqAhmed & #AshrafAhmed shot dead: News18's Amit Ganjoo reports live from the scene of crime, where the cold blooded murder took place in #Prayagraj @maryashakil | @pranshumisraa pic.twitter.com/XB6ieNYBxj
— News18 (@CNNnews18) April 15, 2023
இதற்கென பத்திரிகையாளர்கள் பயன்படுத்தும், மைக், கேமராக்களுடன் நுழைந்து, ஆதிக் அகமதுவை நெருங்கி, மிக அருகில் இருந்து, துப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், இந்த கொலை சம்பவம், காவல்துறை மீதும், மாநில அரசின் மீதும் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
மருத்துவ பரிசோதனை செய்ய ஆதிக் அகமதுவை இரவு நேரத்தில் அழைத்துச் சென்றது ஏன்? அவருக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்காமல் அலட்சியாக இருந்தது ஏன் என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உத்தரப் பிரதேசத்தில் குற்றச் செயல்கள் உச்சத்தை தொட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படும் நபரின் உயிருக்கே பாதுகாப்பு இல்லையெனில், சாமான்ய மக்களின் கதி என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.