முன்னாள் மாடல் அழகி கொலை.. BMW காரில் சடலத்தை ஏற்றிய கும்பல்.. பழிக்குப் பழியாக சம்பவம்?

 
Haryana

அரியானாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில், மாடல் அழகி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஹோட்டலில் கேங்ஸ்டர் சந்தீப் கடோலி கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி அன்று கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாடல் அழகி திவ்யா பஹுஜாவுக்கு (27) கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், அரியான மாநிலம் குருகிராமில் உள்ள ஹோட்டல் ஒன்றில், முன்னாள் மாடல் அழகி திவ்யா பகுஜா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அப்பகுதியில் கார் ஒன்றின் பின் பகுதியில் திவ்யாவின் சடலம் கிடந்ததது. அந்த ஹோட்டலின் உரிமையாளரான அபிஜீத் சிங் என்பவரால் திவ்யா பகுஜா தலையில் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

murder

ஹோட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாகவும், பின்னர் திவ்யாவின் உடலை அப்புறப்படுத்த தனது நண்பர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அபிஜீத் சிங் உள்ளிட்ட கொலையாளிகள் நீல நிற பிஎம்டபிள்யூ காரில் திவ்யாவின் உடலை போர்வையில் சுருட்டி தூக்கிக்கொண்டு சம்பவ இடத்தில் இன்று தப்பிச் சென்ற சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், குருகிராம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 3 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திவ்யா கொலையில் முக்கிய குற்றவாளியான அபிஜீத் சிங்கை பல்வேறு பகுதிகளில் போலீசார் தேடி வருகின்றனர்.

Police

திவ்யாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அபிஜீத் மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திவ்யாவின் கொலைக்கு சந்தீப் கடோலியின் சகோதரி சுதேஷ் கட்டாரியா மற்றும் அவரது சகோதரர் பிரம்ம பிரகாஷ் ஆகியோர் அபிஜீத்துடன் உடந்தையாக இருந்ததாக பனுஜா குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடைபெற்றிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

From around the web