தமிழ் vs கன்னடம்...கமல்ஹாசனுக்கு ஆதரவாக களமிறங்கிய கர்நாடகா சக்ரவர்த்தி!!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தக் லைஃப் பட விழாவில், கர்நாடகாவிலும் என் குடும்பம் இருக்கிறது என்று டாக்டர்.ராஜ்குமார் குடும்பத்தை குறிப்பிட்டுப் பேசிய கமல்ஹாசன், தமிழிலிருந்து வந்தது தான் கன்னடம் என்றும் பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட மொழி ஆதரவாளர்கள் தக் லைஃப் பட பேனர்களை கிழித்தும், படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடனும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னட மொழிக்காகவும் கன்னட சினிமாவுக்காகவும் என்ன செய்து விட்டீர்கள் என்று போராட்டக்காரர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் சிவராஜ்குமார்.
பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் , “கமல்ஹாசன் எப்போதும் கன்னட மொழி குறித்து உயர்வாகவே பேசுவார், பெங்களூரு குறித்து மிகுந்த அபிமானம் கொண்டவர். நமது நகரைப் பற்றி அவர் எப்போதும் பெருமையாக பேசுவார். நாங்கள் எல்லாம் அவரைப் பார்த்து வளர்ந்தவர்கள். நான் எப்போதுமே அவரின் தீவிர ரசிகன்.
தமிழ் நடிகரும், இயக்குநருமான அவர், கன்னட கலாச்சாரம் மற்றும் சினிமாவுக்கு தொடர்ந்து மதிப்பளித்து வருகிறார். நான் கமல்ஹாசனை பார்த்து வளர்ந்தவன். நான் அவரைக் குறித்து எவ்வாறு பெருமைப்படுகிறேன் என்றால், நான் என் தந்தையை பற்றி பெருமை கொள்வது போன்றது அது.
கேமிராக்களுக்கு முன்பு கன்னட மொழி பற்றி பெருமை பேசுவது மட்டும் போதாது. வார்த்தைகளை விட செயல் முக்கியமானது. கன்னட சினிமாவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? புதியவர்களுக்கு நீங்கள் வாய்ப்பளித்தீர்களா? கன்னட மொழிக்கான நமது அர்ப்பணிப்பு வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும். கன்னட மொழிக்காக போராடவும், எனது உயிரைக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.
நான் பேசுவதை தவறாக புரிந்து கொள்ளவேண்டாம். எது சரி, எது தவறு என்று உங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள். தெளிவான பதில் கிடைக்கும். கமல்ஹாசனை பொறுத்தவரை நான் வேறு எதுவும் சொல்லத் தேவையில்லை. அவர் ஏற்கெனவே கன்னட சினிமாவுக்கு நிறைய பங்களித்திருக்கிறார்” என்று பேசியுள்ளார் சிவராஜ்குமார்.
கருநாடக சக்ரவர்த்தி என்று கன்னடமொழி மக்களால் பெருமையுடன் அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், கமல்ஹாசனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளது கர்நாடகாவில் கமல்ஹாசனுக்கு எதிரான சூழலை சற்று தணித்துள்ளது.