மின் பயன்பாடு அதிகம்.. ஏசிக்கு கட்டுப்பாடு விதித்த மின்வாரியம்.. அதிர்ச்சியில் மக்கள்!

 
AC

கேரளாவில் மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் ஏசி பயன்படுத்த அம்மாநில மின்வாரியம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கடந்த காலங்களை விட இந்தாண்டு கோடை வெப்பம் மிக மிக மோசமாக இருக்கிறது. இந்தியாவில் மே மாதம் தான் பொதுவாக வெப்பம் உச்சம் தொடும். ஆனால், இந்தாண்டு ஏப்ரல் மாதமே பல பகுதிகளில் வெப்பம் உச்சம் தொட்டது. தென் இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெப்பம் அதிகரித்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் பெங்களூருவில் கனமழை பெய்து வருதிறது.

இந்த நிலையில் வெப்பம் அதிகம் உள்ள மாநிலங்களில் எல்லாம் மின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் மின் தேவையும் அதிகரிக்கிறது. அந்த வகையில் கேரளாவில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மின்சார வாரியம் திணறுகிறது. மே 2-ம் தேதி மட்டும் மாநிலத்தின் மொத்த மின் நுகர்வு 114.18 மில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. ஒன்றிய மின் தொகுப்பிலிருந்து 450 மெகாவாட் மாதாந்திர ஒப்பந்த அடிப்படையில் பெறப்படுகிறது.

AC

இது தவிர 5.48 மில்லியன் யூனிட்டுகள் கூடுதலாக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டு என்ன தேவை இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததோ அந்த மின் தேவை இப்போதே உள்ளது. எனவே அதிக மின் பயன்பாட்டை தவிர்க்க சில வழிகாட்டுதல்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. தொழிற்சாலைகள் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மின்சாரத்தை பயன்படுத்தி செய்யும் வேலைகளை தவிர்க்க வேண்டும். குடிநீர் பம்பிங் பணிகளின் நேரத்தை குடிநீர் விநியோகம் பாதிக்காத வண்ணம் மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

பெரிய கடைகள், வணிக நிறுவனங்கள் தங்களின் பெயர் பலகைகளில் உள்ள விளக்குகள், அலங்கார விளக்குகளை இரவு 9 மணிக்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வீடுகள், அலுவலகங்களில் ஏசி பயன்படுத்தும் போது 26 டிகிரி செல்சியஸை வைத்து உபயோகிக்க வேண்டும். பொதுமக்களும் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை முடிந்த அளவுக்கு மின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

KSEB

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியிருப்பதாவது, ஒன்றிய மின் தொகுப்பீட்டிலிருந்து மின்சாரத்தை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். சந்தையில் இருந்து 80 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இறக்குமதி திறனையும் நாங்கள் தொட்டு விட்டோம். வெயில் கொளுத்துவதால் மின் தேவையை பூர்த்தி செய்வது சவாலாகவே இருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளாவில் மார்ச் மாதம் மட்டும் 1.5 லட்சம் ஏசி இயந்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை எந்த மாதத்திலும் கேரளாவில் இத்தனை அதிகமான ஏசி இயந்திரங்கள் விற்பனையானது இல்லை. அது போல் கேரளாவில் அதிக அளவிலான மின் வாகனங்களும் உள்ளன.

From around the web