வீட்டிற்கு மின் கட்டணம் ரூ. 1.03 லட்சம்.. அதிர்ச்சியில் 90 வயது பாட்டி!
கர்நாடகாவில் வீட்டின் மாத மின் கட்டணம் ரூ.1.03 லட்சம் வந்ததால் 90 வயது மூதாட்டி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தேர்தலின் போது அவர்கள் இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர். ‘குருஹ ஜோதி’ என்ற திட்டத்தின் கீழ் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ள நிலையில், மங்களூருவில் உள்ள ஒரு குடும்பத்திற்கு 7.71 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்த விவகாரம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பாக்யா நகரில் உள்ள கோப்பல் நகரத்தில், சிறிய வீடு ஒன்றில் வசித்து வருபவர் கிரிஜாம்மா (90). இவர் ஒவ்வொரு முறையும் ரூ. 70 அல்லது ரூ. 80 என ரூ. 100-க்கு குறைவாகத்தான் மின்சார கட்டணத்தை செலுத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் இந்த முறை அவருக்கு ரூ. 1,03,315 மின்சார கட்டணமாக வந்துள்ளது.
ஏற்கனவே வறுமையால் வாடிப்போயுள்ள கிரிஜாம்மா தனக்கு வந்த மின்சார கட்டணம் குறித்து ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினார். இதையடுத்து, ஊடகங்கள் இந்த பிரச்னையை மின்சாரத்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜின் பார்வைக்கு கொண்டு சென்றன. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மீட்டரில் ஏற்பட்ட தவறால் இந்த அதிகமான கட்டணம் குறிப்பிடப்பட்டதாக தெரியவந்தது. மேலும் சிரமத்திற்கு ஆளான பாட்டி, மின்சார கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த தவறுக்கு மின்வாரிய பணியாளர்களும், ரீடிங் எடுத்தவரும் காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. கர்நாடகாவில் 200 யூனிட்டுகள் வரைக்கும் இலவசமாக அறிவிக்கப்பட்டு அதற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு முன்பு இருந்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் நடுத்தர குடும்பத்தினர் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்.