கோழிக்கறிக்கு பதிலாக கத்திரிக்காய் குழம்பு.. கோடாரியால் மனைவியின் தலையை இரண்டாக பிளந்த கணவன்!

தெலுங்கானாவில் மதுபோதையில் இருந்த கணவன் கோடாரியால் மனைவியின் தலை இரண்டாக பிளந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மஞ்சரியாலா மாவட்டம் சென்னூரு மண்டலம் கிஷ்டம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் போஷம். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சங்கரம்மா. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று வந்த போஷம் தனது மனைவியிடம் கோழி கறி குழம்பு வைக்க வேண்டும் என தெரிவித்துவிட்டு வெளியே சென்றார்.
பின்னர் மது போதையில் வீட்டிற்கு வந்த போஷம் சாப்பாட்டிற்கு கோழி கறி குழம்பு கேட்டார். ஆனால் சங்கரம்மா கத்திரிக்காய் குழம்பு ஊற்றினார். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த போஷம் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். நள்ளிரவு சங்கரம்மா வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார்.
அப்போது வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து சங்கரம்மா தலையில் பலமாக வெட்டினார். இதில் தலை இரண்டாக பிளந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சங்கரம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறந்ததை உறுதி செய்த போஷம் அங்கிருந்து தப்பி சென்றார்.
நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் சங்கரம்மா வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு சங்கரம்மா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சென்னூரு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சங்கரம்மா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள போஷத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.