இன்று நள்ளிரவு முதல் அமல்... சுங்கச்சாவடிகள் கட்டண உயர்வு! தமிழகத்தில் எந்தெந்த சுங்கச் சாவடிகள்?

 
Toll

தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது. புதிய நிதி ஆண்டு தொடங்கும் நிலையில் இந்த மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. 

Toll-booth

கட்டண உயர்வு குறித்து அறிக்கையை நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் இந்த டோல்கேட் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் வழிகளிலும், கோவை, மதுரை செல்லும் வழிகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி சுங்கச்சாவடி, திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் இணையும் சந்திப்பில் உள்ள கோவளம் சுங்கச்சாவடி, பரனூர், வானகரம் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்த சுங்கக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

Toll-booth

ரூ.10 முதல் ரூ. 60 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, காருக்கு ரூ.60 லிருந்து ரூ.70 ஆகவும், இலகுரக வாகனத்துக்கு ரூ.105 லிருந்து ரூ.115 ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.225 லிருந்து ரூ.240 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுங்கக் கட்டணம் உயர்வதால், லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு வணிகர் சங்கங்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வாகன ஓட்டிகளும் டோல்கேட் கட்டண உயர்வைக் கைவிடக்கோரி கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web