அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி... இருமொழிக் கொள்கை பற்றி பேசினாரா?

 
EPS Amitshah

தமிழ்நாடு சட்டப்பேரவைக் நிதிநிலை அறிக்கைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த அமித் ஷாவை வேலுமணி சந்தித்த்து பேசிய நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

அண்மையில் சேலத்தில்  பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு, “எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை தேர்தல் நெருங்கும்போது நாங்களே அழைத்துச் சொல்லுவோம் என்று கூறியிருந்தார்.

இருமொழிக் கொள்கை, தொகுதிமறுவரையறை விவகாரங்களில் தமிழ்நாட்டில் பாஜக தனித்து விடப்பட்டுள்ள நிலையில் அதிமுகவுடன் கூட்டணியை அறிவித்து விட அல்லது இணக்கமான சூழலை வெளிப்படையாக தெரிவிக்க பாஜக விரும்புவதாகத் தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமியின் டெல்லிப் பயணத்தைக் குறிப்பிட்டு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், ““சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. டெல்லி சென்றுள்ள அவர் அங்கு யாரை சந்திக்கிறார் என்ற செய்தியும் எங்களுக்கு வந்திருக்கிறது. டெல்லியில் சந்திப்பவர்களிடம் இருமொழிக் கொள்கை பற்றி இபிஎஸ் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறுபவர்கள் நாங்கள் அல்ல.” என்று கூறியிருந்தார்.

ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி இருமொழிக் கொள்கை குறித்து பேசினாரா என்று தெரியவில்லை. அடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் இந்தக் கேள்வியை முன் வைப்பார்கள் என்பது நிச்சயம்.