குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி.. சுவர் இடுக்கில் சிக்கி பரிதாப பலி!
போதையில் தூங்கிய தொழிலாளி மாடியில் இருந்து தவறி விழுந்து 2 வீட்டு சுற்றுச்சுவர் இடுக்கில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் ஸ்டேட் வங்கி வீதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் (38). திருமணமாகாத இவர் பெற்றோர் இல்லாத நிலையில் சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு சிவசுப்பிரமணியம் குடித்துவிட்டு வீட்டிக்கு வந்துள்ளார்.
பின்னர் சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று சுற்றுச்சுவர் மீது ஏறி படுத்து தூங்கியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த நிலையில் பக்கத்து வீட்டின் சுற்றுச்சுவருக்கும், இவரது வீட்டின் சுற்றுச்சுவருக்கும் இடையில் சிக்கியுள்ளார். அதன்பிறகு அவரால் மீளமுடியாத நிலையில் உயிருக்கு நீண்டநேரமாக போராடியுள்ளார்.
இரவு நேரம் என்பதால் யாரும் உதவிக்கு வராத நிலையில் இடுக்கில் உடம்பு சிக்கி நின்ற நிலையில் உயிரிழந்துள்ளார். இதனிடையே இன்று காலை சிவசுப்பிரமணியம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மாடிக்கு வந்தபோது இருவீட்டின் இடிபாடுகளுக்கு இடையே அவர் சிக்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு படை வீரர்களை வர வைத்து ஒரு மணிநேரமாக போராடி ஒருவழியாக உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் சிவசுப்பிரமணியம் குடிபோதையில் தவறி விழுந்து இடுக்கில் சிக்கி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.